வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தோல்வி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு கடைசி இடம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
துபாய்,
பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முடிவடைந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இரு அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கடைசி போட்டியாகும்.
இந்த போட்டி முடிவடைந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (63.73 சதவீதம்) 2ம் இடத்திலும், இந்தியா (50.00 சதவீதம்), நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்) 5ம் இடத்திலும் உள்ளன.
மேலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 6வது இடத்திலும், வங்காளதேசம் (31.25 சதவீதம்) 7வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ் (28.21 சதவீதம்) சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி கண்ட பாகிஸ்தான் (27.98 சதவீதம்) சில புள்ளிகளை இழந்த நிலையில் கடைசி இடத்திற்கு (9-வது இடம்) தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு இனி இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் போட்டிகள் இல்லையென்பதால் கடைசி இடத்தை பிடித்து மோசமான நிலையில் தொடரை நிறைவு செய்துள்ளது.






