

கொல்கத்தா,
ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியே வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தபோது, தனி ஆளாக போராடி ஆட்டத்தை திசைதிருப்பியவர் முகுல் சவுத்ரி. அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்த நிலையில், தோல்வியை ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது;
180, 185 என்பது ஒரு மிகச் சிறந்த ஸ்கோர் என்று நான் நினைத்தேன். பெரிய ஷாட்களை விளையாடுவது எளிதாக இல்லை. மெதுவான பந்துகள் நின்று சென்றன, அடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இறுதியில், முகுல் பேட் செய்த விதத்திற்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். முகுல் சௌத்ரி ஆட்டம்தான் வெற்றியைத் தீர்மானித்தது என்று நான் நினைக்கிறேன். அவர் தைரியமாக ஷாட்களை ஆடினார். அவர் பேட் செய்த விதம் அற்புதமாக இருந்தது.
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம். நாங்கள் விளையாடிய விதத்திற்காக வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 18 ஓவர்கள் வரை நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம் என்று நான் நினைத்தேன். கடைசி இரண்டு ஓவர்களில், ஆங்காங்கே சில தவறுகள் நடக்கலாம். முகுலுக்கும் அந்த பார்ட்னர்ஷிப்புக்கும் பாராட்டுக்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.