தோனி, கோலிக்கு தடை இல்லை.. ஆனால் திக்வேஷ் ரதிக்கு தடை.. இது என்ன நியாயம்..? - சேவாக் விமர்சனம்

ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதற்காக திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த சீசனில் லக்னோ அணிக்காக அறிமுகம் ஆன சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதைவிட விக்கெட் வீழ்த்தியதும் கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக பலமுறை அபராதம் பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றிய திக்வேஷ் ரதி கையில் எழுதி (நோட்புக்) அபிஷேக் சர்மாவை 'வெளியே போ' என்ற வகையில் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றிருந்தார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால் அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார். மேலும் 3 முறை அபராதமும் பெற்றார்.
இந்நிலையில் இந்த வருடம் அறிமுகமான திக்வேஷை விக்கெட் வீழ்த்தியதும் கொண்டாடியதற்காக தடை செய்தது சரியல்ல என்று சேவாக் விமர்சித்துள்ளார். கடந்த காலங்களில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி மற்றும் விராட் கோலியை தடை செய்யாத ஐ.பி.எல். நிர்வாகம் திக்வேஷ் ரதியை மட்டும் தடை செய்தது என்ன நியாயம்? என்று மறைமுக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த தடை கொஞ்சம் கடுமையானது என்று நினைத்தேன். அந்தப் பையன் ஐ.பி.எல்.-ல் முதல் வருடம் விளையாடுகிறான். கடந்த காலங்களில் எம்.எஸ். தோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவருக்கு தடை விதிக்கப்படவில்லை.
விராட் கோலி நடுவர்களிடம் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் தடை விதிக்கப்படவில்லை. எனவே, திக்வேஷ் ரதியை விட்டிருக்கலாம், ஏனென்றால் அவர் ஒரு இளம் வீரர். இப்போதுதான் களத்தில் இறங்கினார். அவரை விடுவித்திருக்கலாம்" என்று கூறினார்.






