மெட்ரோவில் சாதாரண பயணிபோல் பயணம் செய்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்... வைரலாகும் புகைப்படம்

புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்தபோதிலும், எந்தவித ஆடம்பரமும் இன்றி மெட்ரோவில் பயணம் செய்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஜவகல் ஸ்ரீநாத்
Published on

பெங்களூரு,

ஒரு காலத்தில் தனது அதிவேகப் பந்துவீச்சால் உலகின் முன்னணி பேட்டர்களை மிரட்டிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், தற்போது மெட்ரோ ரெயிலில் சாதாரண பயணியைப் போல பயணம் செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜவகல் ஸ்ரீநாத்

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் கையில் டிராலி பையுடன் ஜவகல் ஸ்ரீநாத் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்தபோதிலும், எந்தவித ஆடம்பரமும் இன்றி அவர் மெட்ரோவில் பயணம் செய்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

4 உலகக்கோப்பை

ஜவகல் ஸ்ரீநாத் இந்திய அணிக்காக 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய நான்கு ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சால் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

315 விக்கெட்டுகள்

ஸ்ரீநாத் 229 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 315 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 3 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்டில் 236 விக்கெட்டுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஸ்ரீநாத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 67 டெஸ்ட் போட்டிகளில் 121 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 236 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 10 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பங்களித்த ஸ்ரீநாத், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 1,892 ரன்களையும் குவித்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் வேகப்பந்து வீச்சால் எதிரணி வீரர்களை அச்சுறுத்திய ஸ்ரீநாத், தற்போது மெட்ரோவில் எளிமையாகப் பயணம் செய்யும் புகைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com