

எட்ஜ்பாஸ்டன்,
ஐசிசி கமளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டானி வியாட் அபார சதம் விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய இப்போட்டியில், டானி வியாட் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதத்தை எட்டியதும், மைதானத்தில் இருந்த தனது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் நோக்கி குழந்தையை தொட்டிலில் வைத்து தாலாட்டுவது போன்ற கொண்டாட்டத்தை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தன்பாலின ஈர்ப்பாளரான டேனி - ஜார்ஜியா தம்பதிக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்த நிலையில், இந்த சதத்தை குழந்தைக்கு சமர்ப்பித்துள்ளார்
போட்டிக்குப் பிறகு பேசிய டேனி வியாட்,
"நான் 90 ரன்களில் இருந்தபோது, எப்படியாவது சதம் அடித்து அதை டெய்ஸிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைத்தேன். பந்து பவுண்டரிக்கு சென்றவுடன் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மூன்றாவது டி20 சதத்திற்காக காத்திருந்தேன். அது என் குடும்பத்தினர் முன்னிலையில் எட்ஜ்பாஸ்டனில் நிகழ்ந்தது மிகவும் சிறப்பான தருணம்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
"அணியுடன் இணைந்த பிறகு இன்னும் டெய்ஸியை பார்க்கவில்லை. நாளை(இன்று) சவுத்தாம்ப்டனில் அவளை சந்திக்க உள்ளேன். பல மாதங்களாக அவளை பார்க்காதது போன்ற உணர்வு இருக்கிறது. இரவு நேரங்களிலும் அவளது நினைப்புதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் அவள் நேரில் வந்து எங்களை உற்சாகப்படுத்துவாள் என்று நம்புகிறேன்" என்றார்.
இது டேனி வியாட்டின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3-வது சதமாகும். மேலும், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் ஹெதர் நைட் 2020-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்து அணி தனது அடுத்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வரும் 16-ம் தேதி சவுத்தாம்ப்டனில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.