டி20 வேணாம்.. அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் - ஜெய்ஸ்வாலுக்கு இந்திய தேர்வுக்குழு அறிவுறுத்தல்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் கூறுகின்றன.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல முன்னாள் வீரர்களும் இந்த தொடருக்கான அணித்தேர்வு குறித்து பலவித கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த அணியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் அவருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவர் கடைசியாக கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடமில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக ஆடி வருவதால் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு மறுப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஜெய்ஸ்வாலை தேர்வுக்குழுவினர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட் கிரிக்கெட்) தொடர்ந்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com