

புதுடெல்லி,
இந்திய அணியில் விளையாட இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என ஜிம்பாப்வே தொடருக்கு முன் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 23, 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி, அசோக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தலா 500 ரன்களுக்கு மேல் குவித்து கவனம் ஈர்த்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான பிரப்சிம்ரன் சிங், இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச அறிமுகம் காணும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ள நிலையில், தனது மகிழ்ச்சியை பிரப்சிம்ரன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"வாழ்க்கை முழுவதும் எதற்காக உழைத்தோமோ, அது நடக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2023 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் நான் இருந்தேன். ஆனால், ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதனால் இந்திய அணிக்காக அறிமுகமாகும் தருணம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால், இந்த முறை என் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் இருக்கிறது. ஜிம்பாப்வே சென்றால், போட்டியில் விளையாடாமல் நான் திரும்ப மாட்டேன். நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதோடு, இந்திய அணியில் எனக்கான இடத்தை நிரந்தரமாக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் அணியில் இருந்து வெளியேறும் நிலை வராத அளவுக்கு என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்," என்றார்.