டு பிளெசிஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி அரைசதம் - துபாய் கேபிடல்ஸ் அணிக்கு 2-வது வெற்றி

கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிக்கும் முதல் தோல்வி கிடைத்தது.
டு பிளெசிஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி அரைசதம் - துபாய் கேபிடல்ஸ் அணிக்கு 2-வது வெற்றி
Published on: 

ஐஎல்டி20 (ILT20) கிரிக்கெட் தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் பாப் டு பிளெசிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தனர். இறுதிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் அதிரடி காட்டியதால் துபாய் அணி 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இருந்த கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிக்கும் முதல் தோல்வி கிடைத்தது.

கல்ஃப் ஜெயன்ட்ஸ் 176 ரன்கள்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இப்ராகிம் ஜத்ரான் 2 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 5 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இந்த நெருக்கடியான சூழலில் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பொறுப்புடன் விளையாடினார். அவருடன் இணைந்த அஸ்மத்துல்லா உமர்சாய் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் கேப்டன் ஹென்ரிச் கிளாசன் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். குர்பாஸ் மற்றும் கிளாசன் இணைந்து துபாய் பந்துவீச்சாளர்களைத் தாக்கி ரன்கள் குவித்தனர்.

குர்பாஸ் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். கிளாசன் 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். டேவிட் மில்லர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனால் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. துபாய் கேபிடல்ஸ் தரப்பில் டைமல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

டு பிளெசிஸ் – ஸ்டாய்னிஸ் அதிரடி

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய துபாய் கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. மசூத் குர்பாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அனுபவ வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ் ஹோல்டன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹோல்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அவர் அரைசதத்தை 36 பந்துகளில் எட்டினார்.

மறுமுனையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியில் மிரட்டினார். சுழற்பந்து வீச்சாளர்களை குறிவைத்து விளையாடிய அவர், பவுண்டரிகளும் சிக்சர்களுமாக ரன்களை விரைவாகச் சேர்த்தார்.

ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.இருவரின் ஆட்டமும் துபாய் கேபிடல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை எளிதாக்கியது

கடைசி நேரத்தில் பவல் அதிரடி!

டு பிளெசிஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சாம் பில்லிங்ஸ் மற்றும் ரோவ்மன் பவல் அணியின் வெற்றிப் பொறுப்பை ஏற்றனர்.

பில்லிங்ஸ் நிதானமாக விளையாட, பவல் அதிரடியாக ரன்கள் குவித்தார். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

பவல் 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். சாம் பில்லிங்ஸ் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில் துபாய் கேபிடல்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

X