

ஆக்லாந்து,
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி டிரென்ட் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலேயே ஜேக்கப் டபி அதிர்ச்சி அளித்தார். முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து நமன் தீர், அர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் ஆட்டமிழக்க செய்தார்.
4 ஓவர்கள் பந்துவீசிய டபி, 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக இதற்கு முன்பு டிரென்ட் போல்ட்டின் 4 விக்கெட்டுகளுக்கு 34 ரன்கள் என்ற பந்துவீச்சு இருந்தது. 2017-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
தற்போது 4 விக்கெட்டுகளுக்கு 23 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம், போல்ட்டின் சாதனையை டபி முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்கள் விளாசினார். மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 3-1 என பின் தங்கி உள்ளது.