துலீப் கோப்பை இறுதிப்போட்டி - இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தல்

துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இஷான் கிஷன்
Published on

சென்னை,

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.

பேட்டிங் தேர்வு

துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு மண்டலம் - தெற்கு மண்டல அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அசத்திய சூர்யவன்ஷி

கிழக்கு மண்டல அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

37 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபிமன்யு ஈஸ்வரன் - கேப்டன் இஷான் கிஷன் இணைந்து சிறப்பாக விளையாடினர். அரைசதம் கடந்த அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இஷான் கிஷன் - ஷிகர் மோகன் கூட்டணி

இதையடுத்து ஷிகர் மோகன், இஷான் கிஷனுடன் இணைந்தார். சிறப்பாக விளையாடிய ஷிகர் மோகன் 120 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் கிஷன் - குஷாக்ரா ஜோடி தெற்கு மண்டல அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது.

10-வது சதம்

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் பவுண்டரி அடித்து தனது முதல் தர கிரிக்கெட்டில் 10-வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் குஷாக்ராவும் சிறப்பாக விளையாடினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 79 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்திருந்தது. இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குஷாக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரட்டை சதம்

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குமார் குஷாக்ரா 132 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இஷான் கிஷனுடன் அனுகுல் ராய் இணைந்தார். இந்த ஜோடி தொடர்ந்து ரன்களை குவித்தது. இதில் அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் 270 பந்துகளில் 203 ரன்கள் விளாசி இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில் 26 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன் மூலம் கிழக்கு மண்டல அணி 122 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தொடர்ந்து, அனுகுல் ராய் - இஷான் கிஷன் ஜோடி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com