3-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல்... தொடரில் முன்னிலை

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து
Published on: 

பிரிஸ்பேன்,

3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

சரிந்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் அபாரமாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லியாம் டாசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய அணியில் சாம் ஹார்பர் 14 பந்துகளில் 26 ரன்களும், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். நிகில் சவுத்ரி 19 ரன்களும், மிட்செல் ஓவன் 17 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு சுருண்டது.

டொனால்ட், காக்ஸ் அதிரடி

இதையடுத்து 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில், டிஎல்எஸ் முறையின்படி இங்கிலாந்து அணிக்கு 93 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான அனூரின் டொனால்ட் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

கேப்டன் ஹாரி புரூக் 9 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜோர்டான் காக்ஸ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 8.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய தரப்பில் ரிலே மெரிடித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

X