3-வது டி20: ஓவர்டன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்... ஆஸ்திரேலியாவை 108 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும்.
இங்கிலாந்து
Published on: 

பிரிஸ்பேன்,

3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 108 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து அணி.

ஆல் அவுட்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஜேமி ஓவர்டன் மிரட்டல்

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் சிறப்பாகப் பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவர் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லியாம் டாசன் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஹார்பர், ப்ரேசர்-மெக்குர்க்

ஆஸ்திரேலிய அணியில் சாம் ஹார்பர் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். மிட்செல் ஓவன் 17 ரன்களும், நிகில் சவுத்ரி 19 ரன்களும் சேர்த்தனர்.

மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர் 1-1 என சமநிலை

இந்தத் தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது.

தற்போது மூன்றாவது போட்டியில் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும்.

X