இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது. #INDvsENG
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
Published on

நாட்டிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் (103 ரன்கள்) அற்புதமான சதம், புஜாராவின் (72 ரன்கள்) நேர்த்தியான ஆட்டத்தின் உதவியால் ரன்மழை பொழிந்தது.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த இங்கிலாந்து குக் விக்கெட்டை தாரைவார்த்தது. இஷாந்த் வீசிய பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் குக் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் ஜென்னிங்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் (13 ரன்கள்) விக்கெட்டை பும்ரா சாய்த்தார். ஒலி போப் 16 ரன்களில் சமி பந்தில் பெவிலியன் திரும்பினார்.

இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. பென்ஸ்டோக்ஸ் 3 ரன்களுடனும் ஜோஸ் பட்லர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 437 ரன்கள் தேவையுள்ள உள்ள நிலையில், கைவசம் இன்னும் 6 விக்கெட்டுகளே உள்ளது. இன்னும் ஒன்றரை நாள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் டிரா செய்ய வேண்டும் என்றால், கூட இங்கிலாந்து பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும். இதனால், இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com