இங்கிலாந்து தொடர்; சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமுடன் உள்ளேன் - கருண் நாயர்


இங்கிலாந்து தொடர்; சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமுடன் உள்ளேன் - கருண் நாயர்
x

Image Courtesy: @BCCI

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்ததன் காரணமாக அவருக்கு தேசிய அணியின் கதவு திறந்துள்ளது. குறிப்பாக 2024-25-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக 9 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 863 ரன்கள் எடுத்தார். விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார்.

33 வயதான கருண் நாயர் இதுவரை 6 டெஸ்டுகளில் விளையாடி 374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்ததும் அடங்கும். ஷேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்தியர் இவர் தான். கடைசியாக 2017-ம் ஆண்டு டெஸ்டில் விளையாடி இருந்தார்.

இந்த நிலையில் கருண் நாயர் கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்திய அணிக்குள் மீண்டும் வந்தது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது. இதற்காக நன்றி கடன்பட்டுள்ளேன். அதிர்ஷ்டவசமாக மீண்டும் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இரு கையாலும் கெட்டியாக பிடித்துக் கொள்வதை எதிர்நோக்கி உள்ளேன்.

ஆனால், ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. களம் இறங்கி எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமுடன் உள்ளேன். தற்போதைய நிலைமையில் எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மறுபிரவேசத்தை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story