டெஸ்ட் கிரிக்கெட்; 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லார்ட்ஸ்,

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 56.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பியூ வெப்ஸ்டர் 72 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 57.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பெடிங்ஹாம் 45 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது 2வது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் 43 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவர்களில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச்சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். மேலும் ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக (68 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com