மிட்செல் மார்ஷின் அதிரடி சதம் வீண்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து
Published on: 

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

181 ரன்கள்

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பிலிப் சால்ட், அனுரின் டொனால்ட் ஆகியோர் தலா 7 ரன்களிலும், ஹாரி புரூக் 9 ரன்களிலும், டாம் பான்டன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 32 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நெருக்கடியான சூழலில் ஜேம்ஸ் கோல்ஸ் 33 ரன்களும், ஜோர்டன் காக்ஸ் 23 ரன்களும் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சாம் கர்ரன் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் விளாசினார். ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

மார்ஷின் சதம் வீண்

இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் பிரேசர்-மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மிட்செல் மார்ஷ் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 119 ரன்கள் குவித்தார். சாம் ஹார்பர் 18 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், மற்ற வீரர்களால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்ஷ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹென்றி குரோம்ப் வீசிய அதே ஓவரில் ஜோயல் டேவிஸும் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

X