இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் கைது

இரவு விடுதியில் தகராறு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் கைது
Published on

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிஸ்டல் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பிறகு சக வீரர் அலெக்ஸ் ஹேல்சுடன் இரவு விடுதிக்கு சென்ற ஸ்டோக்ஸ், மதுபானம் அருந்தியதுடன் அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் ஸ்டோக்ஸ் தாக்கியதில் அந்த நபர் முகத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, இரவு விடுதி நிர்வாகம் போலீஸுக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஸ்டோக்சை கைது செய்துள்ளனர். அதேபோல், லண்டன் மைதானத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஸ்டோக்ஸ் ஏற்கனவே 2012, 2013, 2014ல் இதே போன்று குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com