

டப்ளின்,
ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் அணி, கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பெல்பாஸ்ட் வுல்வ்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பெல்பாஸ்ட் வுல்வ்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் டிம் டெக்டர் அபாரமாக விளையாடி 62 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். தேவன் கான்வே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் அணிக்கு ராஸ் அடேர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஜே.ஜே. ஸ்மட்ஸ் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.
இதன்பின்னர் ஆண்ட்ரீஸ் கவுஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். பிராண்டன் மெக்முல்லன் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.