விராட் கோலியை பார்த்துத்தான் ஒவ்வொரு இளம் வீரரும்... - சேவாக் புகழாரம்


விராட் கோலியை பார்த்துத்தான் ஒவ்வொரு இளம் வீரரும்... - சேவாக் புகழாரம்
x

இந்த தலைமுறையின் மிகவும் பிட் ஆன வீரர் விராட் கோலி என்று சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 27000+ ரன்களையும் 82 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

பேட்டிங்கில் மட்டுமின்றி பிட்னசிலும் அவர் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். குறிப்பாக விராட் கோலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் பிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அது போக பிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக சொல்லும் அளவுக்கு விராட் கோலி தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த தலைமுறையின் மிகவும் பிட் ஆன வீரர் விராட் கோலி என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் விராட் கோலியால் தற்போது இளம் வீரர்களும் பிட்டாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “உலக கிரிக்கெட்டில் உடற்தகுதி புரட்சியை தொடங்கிய விராட் கோலிக்கு பாராட்டுகள். அவர் இந்திய கிரிக்கெட்டில் உடற்தகுதி கலாச்சாரத்தை கொண்டு வந்தார். அவர் இந்த தலைமுறையின் மிகவும் பிட் ஆன கிரிக்கெட் வீரர். இப்போது அவரால் ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரரும் உடற்தகுதியுடன் இருக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.


1 More update

Next Story