

இந்தூர்,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் 2,000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டிக்கு முன்பு டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடக்க அவருக்கு 33 ரன்கள் தேவைப்பட்டன. தற்போது 1,024 பந்துகளை எதிர்கொண்டு 2,000 டி20 சர்வதேச ரன்களை கடந்து 2,000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 1,164 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அபிஷேக் அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருடன் அபிஷேக் சர்மாவும் இணைந்துள்ளார்.
ரோகித் சர்மா - 4,231 ரன்கள்
விராட் கோலி - 4,188 ரன்கள்
சூர்யகுமார் யாதவ் - 3,272 ரன்கள்
ஹர்திக் பாண்டியா - 2,288 ரன்கள்
கே.எல். ராகுல் - 2,265 ரன்கள்
அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் அபிஷேக் சர்மா, இந்திய டி20 அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்து வருகிறார்.