

வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து நடந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காளதேசம் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 144 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்க வீரர் தன்சித் ஹசன் தமீம் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் (58 பந்துகள், 1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) குவித்தார். அவருடன் பர்வேஸ் ஹொசைன் எமோன் 24 ரன்களும், கேப்டன் தௌஹித் ஹிரிதோய் 24 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம் வங்காளதேசம் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருந்த வங்காளதேசம், டி20 தொடரை கைப்பற்றி சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.