

கொழும்பு,
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்றும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் இலங்கை 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் சோனல் தினுஷா 103 ரன்களும், பசிந்து 80 ரன்களும் குவித்தனர்.
ஆனால், 213 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கி ஆடி வருகிறது.
இந்நிலையில், 2வது இன்னிங்சில் 4ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கமிந்து மென்டிஸ் 10 ரன்னிலும், பசிந்து சூரியபண்டாரா 35 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்திய பந்து வீச்சாளர்கள் சிராஜ், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 2வது இன்னிங்சில் இலங்கை 130 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.