

மிர்புர்,
ஆஸ்திரேலியா அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மிர்புரில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகள் நேரடி ஒருநாள் தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஆஸ்திரேலியா இந்த தொடரில் மீண்டு வருவதற்கான முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
அந்த அணியில் மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட் மற்றும் ஆடம் ஜாம்பா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும், மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்காதது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
வங்காளதேச அணியில் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹ்ரிடோய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, நஹித் ராணா, தஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சொந்த மண்ணில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி நான்கு ஒருநாள் தொடர்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்த சிறப்பான சாதனையை தொடரும் நோக்கத்துடன் அந்த அணி களமிறங்கியுள்ளது.
மறுபுறம், சொந்த மண்ணின் சாதகத்தை பயன்படுத்தி வெற்றிப் பயணத்தை நீட்டிக்க வங்காளதேசம் தீவிரம் காட்டும். எனவே இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.