முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு.. இங்கிலாந்து 248 ரன்களில் ஆல் அவுட்


முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு.. இங்கிலாந்து 248 ரன்களில் ஆல் அவுட்
x
தினத்தந்தி 6 Feb 2025 5:04 PM IST (Updated: 6 Feb 2025 5:18 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் பட்லர் மற்றும் பெத்தேல் அரைசதம் அடித்தனர்.

நாக்பூர்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா அறிமுக வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சால்ட் மற்றும் டக்கெட் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சால்ட் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். முன்னணி வீரரான ஜோ ரூட் 19 ரன்களில் அவுட்டானார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுக்க பட்லர் மற்றும் பெத்தேல் போராடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். பட்லர் 52 ரன்களிலும், பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆர்ச்சர் (21 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் 47.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

1 More update

Next Story