முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: வாட்லிங் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 615 ரன்கள் குவிப்பு - தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாட்லிங் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 615 ரன்கள் குவித்தது. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: வாட்லிங் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 615 ரன்கள் குவிப்பு - தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்
Published on

மவுன்ட்மாங்கானு,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் எடுத்து இருந்தது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 119 ரன்னுடனும், மிட்செல் சான்ட்னெர் 31 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வாட்லிங், மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். சிறப்பாக ஆடிய மிட்செல் சான்ட்னெர் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். மிட்செல் சான்ட்னெர் 126 ரன்னில் சாம் குர்ரன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங் -சான்ட்னெர் இணை 261 ரன்கள் சேர்த்தது.

அடுத்து டிம் சவுதி களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய வாட்லிங் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் அவர் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். டிம் சவுதி 9 ரன்னில் அவுட் ஆனார். அணியை சரிவில் இருந்து மீட்ட வாட்லிங் 473 பந்துகளில் 24 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 201 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 3 விக்கெட்டும், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. டாம் சிப்லி 12 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 31 ரன்னிலும், ஜாக் லீச் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். 3 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னெர் கபளகரம் செய்தார். ஜோ டென்லி 7 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com