

லண்டன்,
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தன்னுடன் பணியாற்றிய முன்னாள் பயிற்சியாளர்களான ஜேம்ஸ் பாஸ்டர் மற்றும் எரிக் சைமன்ஸ் ஆகியோரை இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழுவில் இணைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமான ECB இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சி.எஸ்.கே. அணியில் 2009ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாகப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பிளெமிங், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார். அவருடன் 2018 முதல் 2026 வரை சி.எஸ்.கே. அணியின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த எரிக் சைமன்ஸ், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பரான ஜேம்ஸ் பாஸ்டர், பீல்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான எரிக் சைமன்ஸ், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜேம்ஸ் ஃபாஸ்டர், 2018 முதல் 2022 வரை இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆலோசகராகப் பணியாற்றியதுடன், நியூசிலாந்து அணியின் பயிற்சிக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். மேலும், ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் வங்கதேச பிரீமியர் லீக் தொடர்களிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சிக் குழுவில் ரிச்சர்ட் டாசன் மற்றும் மார்கஸ் டிரெஸ்கோதிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ரிச்சர்ட் டாசன், சுழற்பந்து வீச்சுக்கான தேசியப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அதே நேரத்தில், இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் தொடர்ந்து செயல்படுவார். அவரது பயிற்சிக் குழுவில் சாரா டெய்லர், ஜீதன் படேல் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.