

புதுடெல்லி,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில், முன்னாள் இந்திய கேப்டன் டிராவிட்டின் இளைய மகன் அன்வே இடம்பிடித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், தற்போது இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
அன்வே டிராவிட்டின் சகோதரர் சமித் டிராவிடும் இந்திய ஜூனியர் அணியில் அங்கம் வகித்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக கடைசி நேரத்தில் அந்த தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்த ராகுல் டிராவிட்டின் மகன்கள் இருவரும் இந்திய ஜூனியர் அணியில் வாய்ப்பு பெற்றிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இலங்கை தொடரில் அன்வே டிராவிட் எவ்வாறு செயல்படுகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.