ருதுராஜ், கார்த்திக் அசத்தல் பேட்டிங்.... மும்பையை வீழ்த்திய சென்னை

சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருதுராஜ், கார்த்திக் அசத்தல் பேட்டிங்.... மும்பையை வீழ்த்திய சென்னை
Published on

சென்னை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ரிக்கல்டன் - நமன் திர் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிக்கல்டன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நமன் திர் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Also Read
ஜேக்கப்ஸ் அதிரடி... வங்காளதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்த நியூசிலாந்து
ருதுராஜ், கார்த்திக் அசத்தல் பேட்டிங்.... மும்பையை வீழ்த்திய சென்னை

ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் கம்போஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கெய்க்வாட் மற்றும் சாம்சன் களமிறங்கியநிலையில், சாம்சன் 11(9) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய உர்வில் படேல், கெய்க்வாட்டுடன் இணைந்து அதிரடியில் இறங்கினார்.

24 (12) ரன்கள் அடித்திருந்தபோது ஏ.எம். கஸான்பர் வீசிய பந்தில் உர்வில் படேல் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் கெய்க்வாட்டுடன் கார்த்திக் சர்மா ஜோடி சேர்ந்தார். பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து சென்னை 62 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து கெய்க்வாட்- கார்த்திக் ஜோடி அதிரடியாக ஆட, கெய்க்வாட் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து கார்த்திக் சர்மாவும் 39 பந்துகளில் தனது அரைசத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கெய்க்வாட் 67(48)*ரன்களுடனும், கார்த்திக் 54(40)* ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் பும்ரா மற்றும் கஸான்பர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com