பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் அல்ல... இவர் தான் - கவுதம் கம்பீர்

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் அல்ல... இவர் தான் - கவுதம் கம்பீர்
Published on

மும்பை,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் என்னை பொறுத்தவரை உண்மையான ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் தான் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ். அவரைத் தாண்டி நீங்கள் பார்க்க முடியாது". விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது.

அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக, ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com