வாஷிங்டன் சுந்தர் குறித்த எக்ஸ் பதிவுக்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதில்

குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது குறித்து ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
புதுடெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்திற்கான குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் அவர் ஐ.பி.எல். -ல் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணியின் சிறந்த 15 வீரர்களில் ஒருவராக இடம் பெறும் சுந்தருக்கு 10 அணிகள் இருக்கும் ஐபி.எல். தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்பது மர்மமாகும்" என்று பதிவிட்டிருந்தார்.
ரசிகரின் இந்த பதிவிற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, "எனக்கும் கூட இது ஆச்சரியமாக இருக்கிறது" என்று பதிலளித்தார்.






