

புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பரோடா அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 24-ம் தேதி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியதே ஹர்திக் பாண்டியா பங்கேற்ற கடைசிப் போட்டியாகும். அதன்பிறகு முதுகுப் பிடிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவர் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். ஆனால், பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர்திறன் மையத்தில் (Centre of Excellence) அவர் சிகிச்சை மற்றும் உடற்தகுதிப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட பரோடா அணிக்கு க்ருணால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஜிதேஷ் சர்மா, தீபக் ஹூடா, ரசிக் சலாம் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பரோடா அணி தனது முதல் போட்டியில் நவம்பர் 14-ம் தேதி மும்பையில் சண்டிகர் அணியை எதிர்கொள்கிறது.