

மும்பை,
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியதற்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பல சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்தார். இந்த வெற்றிக்காக நீண்ட காலமாக காத்திருந்ததாக அவர் கூறினார்.
போட்டிக்குப் பிறகு ஹர்திக் கூறியதாவது: “2024 உலகக்கோப்பை இறுதியில் நான் பல சிரமங்களை சந்தித்தேன். அந்த அனுபவத்துக்குப் பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தியாவுக்காக அதிகமான கோப்பைகளை வெல்வதே என் வாழ்க்கையின் இலக்கு. நான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோப்பையாவது வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. இன்று அது உண்மையாகியுள்ளது. வெற்றி என்பது வெறும் வார்த்தைகளால் வராது. உண்மையான கடின உழைப்பால் தான் கிடைக்கும். கடினமாக உழையுங்கள், தாழ்மையாக இருங்கள், நல்ல மனிதராக வாழுங்கள்,”என்றார்.
ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
தனது வெற்றிக்கு பின்னால் இருந்தவர்களுக்கும் ஹர்திக் நன்றி தெரிவித்தார். “என் அணியினரும், மோகித், கார்த்திக், என் பிஸியோ, பாதுகாப்பு அதிகாரி சித்தாந்த், ஊட்டச்சத்து நிபுணர் நிக்கோல், பயிற்சியாளர்கள் சாகர், சமையல்காரர் விஜய் உள்ளிட்ட பலர் என்னை ஆதரித்தனர். மேஹிகா என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து வெற்றிகள் தொடர்ந்து என்னைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் பார்க்கும் ஹர்திக் பாண்ட்யா, இவர்களின் உழைப்பின் விளைவுதான்,” என்றார்.
10 ஆண்டுகளில் 10 கோப்பைகள் இலக்கு
தன் எதிர்காலத்தையும் பற்றி அவர் பேசுகையில், “இப்போது நான் அணியின் மூத்த வீரராக இருக்கிறேன். ஆனாலும் இன்னும் சுமார் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன். என் கெரியரில் இதுவரை பாதி தான் முடிந்துள்ளது. மீதமுள்ள காலத்தில் குறைந்தது 10 கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது என் இலக்கு. அதில் ஐசிசி மற்றும் ஐபிஎல் கோப்பைகளும் அடங்கும்” என்றார்.