

சென்னை,
ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்னென்ன வீரர்களை வழங்க வேண்டியிருக்கும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு செல்வது குறித்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தங்கள் அணிக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்னென்ன வீரர்களை வழங்க வேண்டியிருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சென்னை அணி சிவம் துபேவை மட்டும் வழங்கினால் மும்பை இந்தியன்ஸ் சம்மதிக்காது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். துபேவுடன் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவையும் மும்பை அணி கேட்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆயுஷ் மாத்ரே இல்லாத பரிமாற்ற பேச்சுவார்த்தையை மும்பை அணி ஏற்றுக்கொள்ளாது என்றே தான் கருதுவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுஷ் மாத்ரேவை வழங்க சென்னை அணி விரும்பவில்லை என்றால், சிவம் துபேவுடன் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸையும் சேர்த்து வழங்கலாம் என்றும் கூறினார்.
இதையும் மும்பை அணி ஏற்காவிட்டால், சிவம் துபே, நாதன் எல்லிஸ் ஆகியோருடன் விக்கெட் கீப்பர் பேட்டரான உர்வில் படேலையும் சேர்த்து வழங்கலாம் என அஸ்வின் கூறியுள்ளார். இதன் மூலம் மும்பை அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு அணிகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் பல வீரர்களை உள்ளடக்கிய பரிமாற்றமும் நடைபெறலாம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிவம் துபே, நாதன் எல்லிஸ், உர்வில் படேல் மற்றும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆகியோரைச் சென்னை அணி வழங்கிவிட்டு, பதிலுக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் சாஹரைப் பெறலாம் என்று கூறினார்.
தீபக் சாஹர் புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் என்பதால், அவர் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.