

லண்டன்,
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பல சாதனைகளை தனது பெயரில் பதிவு செய்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா வலுவான அடித்தளம் அமைத்தனர். அதனைத்தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக ரன் மழை பொழிந்தார்.
வெறும் 27 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ஹர்மன்பிரீத், 25 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இவரது அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. இதன் மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு 2018 மற்றும் 2023 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா எடுத்த 167 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 2024-ல் இலங்கைக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்த தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்தார்.
அத்துடன், சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த 3-வது வீராங்கனை என்ற பெருமையையும் ஹர்மன்பிரீத் பெற்றார். வெஸ்ட் இண்டீஸின் டீண்ட்ரா டாட்டின் 22 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்திலும், இங்கிலாந்தின் சோபி (24 பந்துகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.