

கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியில் சஹிப்சதா பர்ஹான் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதமடித்தார். பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியில் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சால்ட் (0) ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பட்லர் 2 ரன்களும், பெத்தேல் 8 ரன்களும், பாண்டன் 2 ரன்னும், சாம் கரன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி புருக் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் சிறப்பான ஆடினார்.
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சூழலில் அதிரடியாக ரன் குவித்து வந்த ஹேரி புரூக் 50 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தியநிலையில், 100 (51) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வில் ஜாக்ஸ் 28 (23) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஓவர்டன் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் வெற்றிபெற 4 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முடிவில் இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.