அவர் இங்கிலாந்தின் வீரேந்திர சேவாக் - டேவிட் லாயிட் பாராட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
அவர் இங்கிலாந்தின் வீரேந்திர சேவாக் - டேவிட் லாயிட் பாராட்டு
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது.

பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பென் டக்கெட் இங்கிலாந்தின் வீரேந்திர சேவாக் என்று அந்நாட்டின் முன்னாள் வீரரான டேவிட் லாயிட் பாராட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்று அதிரடியாக விளையாடிய பேட்ஸ்மேன் சேவாக். அவரைப்போன்று பென் டக்கெட்டும் விளையாடுவதாக லாயிட் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஷஸ் தொடரில் ஆண்டர்சனுக்கு கூல்டிரிங்ஸ் தூக்கி கொண்டு சென்றது முதல் பென் டக்கெட் நீண்ட தூரம் கடந்து வந்துவிட்டார். தற்போது அவர் இங்கிலாந்து அணியின் வீரேந்திர சேவாக் யார்? என்ற கேள்விக்கு பதிலாக இருக்கிறார். அவர் உங்களுடைய உலக லெவன் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடக்கூடியவர்.

ரிவர்ஸ் ஸ்வீப் அவருக்கு இயற்கையாக வருகிறது. அதை விளையாடுவதற்கு அவர் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அவர் அதை வேடிக்கைக்காக விளையாடுகிறார். ஏனெனில் பள்ளியில் அவர் ஒரு நல்ல ஆக்கி வீரராக இருந்தார். அதனால் அவருக்கு அது ஒரு ஹாக்கி ஷாட் போன்றது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com