

பாட்னா,
இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் 10 வயது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அதிரடி சதம் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.
சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத், பயிற்சிப் போட்டி ஒன்றில் 87 பந்துகளை சந்தித்து 103 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 20 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் இடம்பெற்றிருந்தது.
தம்பியின் சிறப்பான சாதனையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, போட்டியின் ஸ்கோர்கார்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணமும் வேகமாக முன்னேறி வருகிறது. அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடரில் சிறப்பாக விளையாடி ஏராளமான ரன்களை குவித்த அவர், ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர்களில் ஒருவராக சாதனை படைத்தார்.
தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ள இந்தியா ‘ஏ’ அணியில் வைபவ் இடம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாட உள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அவரது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷியும் சிறுவயதிலேயே சதம் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பது, கிரிக்கெட் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.