இரட்டை சதத்தை 1 ரன்னில் தவறவிட்ட தேவ்தத் படிக்கல் - நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ வலுவான முன்னிலை

நியூசிலாந்து ஏ அணியை விட 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தேவ்தத் படிக்கல்
Published on: 

லிங்கன்,

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. தேவ்தத் படிக்கல் 199 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். சாய் சுதர்சன் 91 ரன்கள் எடுத்தார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் குவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் லிங்கனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களும், கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். சாய் சுதர்சன், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தேவ்தத் படிக்கல் 32 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

317 ரன்கள் குவித்த நியூசிலாந்து ஏ

தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ரைஸ் மரியு 76 ரன்களும், டீன் பாக்ஸ்கிராப்ட் 51 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் முன்னிலை பெற்றது.

படிக்கல் - சாய் சுதர்சன் ஜோடி

204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மீண்டும் தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து தேவ்தத் படிக்கலும் சாய் சுதர்சனும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் ரன் குவிக்கும் வகையிலும் விளையாடினர். சிறப்பாக ஆடிய படிக்கல் சதம் அடித்தார். மறுமுனையில் சாய் சுதர்சன் அரைசதம் கடந்தார்.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்தது. அப்போது சாய் சுதர்சன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் துருவ் ஜூரல் 2 ரன்களில் வெளியேறினார்.

199 ரன்களில் ஆட்டமிழந்த படிக்கல்

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய படிக்கல் இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால், 199 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இதனால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டார்.

அவருக்கு பிறகு களமிறங்கிய யாஷ் ரதோட் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

284 ரன்கள் முன்னிலை

3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி நியூசிலாந்து ஏ அணியை விட 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com