கிரிக்கெட் வீரர்களின் உயிரைக் காக்கும் ஹெல்மெட்... உருவானது எப்படி?

கிரிக்கெட் ஹெல்மெட் பல வீரர்களின் உயிரையும், கிரிக்கெட் வாழ்க்கையையும் காப்பாற்றிய முக்கிய கண்டுபிடிப்பாகும்.
ஹெல்மெட்
Published on

சென்னை,

கிரிக்கெட் வீரர்களின் உயிரை காக்கும் முக்கிய கவசமாக இருக்கும் ஹெல்மெட் உருவானது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

தலையை பாதுகாக்கும் முக்கிய கவசம்

கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவை தலையில் பட்டால் கடுமையான காயம் ஏற்படும். இதை தடுக்க பயன்படும் மிக முக்கியமான பாதுகாப்பு சாதனம் ஹெல்மெட். பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பர்கள் மற்றும் பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்கும் பீல்டர்களும் ஹெல்மெட் அணிகின்றனர்.

இன்றைய கிரிக்கெட்டில் பேட்டுக்கு அடுத்தபடியாக வீரர்களுக்கு மிகவும் அவசியமான பாதுகாப்பு சாதனமாக ஹெல்மெட் உள்ளது. இது வீரர்களுக்கு பாதுகாப்புடன், நம்பிக்கையுடனும் விளையாட உதவுகிறது.

ஹெல்மெட்டின் தொடக்க காலம்

கிரிக்கெட் தோன்றிய உடனே ஹெல்மெட் பயன்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகே அதன் அவசியம் உணரப்பட்டது. 1930-களில் இங்கிலாந்து வீரர் பாஸ்டி ஹெண்டிரன் ஹெல்மெட் போன்ற தலைக்கவசத்தை அணிந்து விளையாடிய முதல் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

ஹெல்மெட் பயன்பாடு

1970-களில் நவீன கிரிக்கெட் ஹெல்மெட்கள் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கின. இங்கிலாந்து வீரர் டென்னிஸ் அமிஸ், மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டை மாற்றியமைத்து பேட்டிங் செய்தார். முதலில் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். ஆனால், போட்டியின்போது அவரது தலையில் பந்து பட்டும் காயம் ஏற்படாததால், ஹெல்மெட்டின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரிந்தது.

பயன்படுத்த தொடங்கினர்

இதையடுத்து டோனி கிரேக், ஜாகிர் அப்பாஸ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் ஹெல்மெட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி

காலப்போக்கில் ஹெல்மெட்களிலும் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது பிளாஸ்டிக் மற்றும் பைபர் போன்ற வலுவான பொருட்களால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் எடை சுமார் 750 கிராம் மட்டுமே. எடை குறைவாக இருந்தாலும், அதிவேகமாக வரும் பந்துகளின் தாக்கத்தை தாங்கும் திறன் கொண்டவை.

உயிரைக் காக்கும்

கிரிக்கெட் ஹெல்மெட் என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் மட்டுமல்ல. பல வீரர்களின் உயிரையும், கிரிக்கெட் வாழ்க்கையையும் காப்பாற்றிய முக்கிய கண்டுபிடிப்பாகும். இன்று ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் நம்பிக்கையான துணையாக ஹெல்மெட் திகழ்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com