இலங்கையை வீழ்த்தி இமாலய வெற்றி... முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா...!

இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
Image Credits : Twitter.com/BCCI
Image Credits : Twitter.com/BCCI
Published on

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட்கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் முறையே 92 (11 பவுண்டரி, 2 சிக்சர்) மற்றும் 88 (11 பவுண்டரி) ரன்களில் அவுட்டாகினர்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் கே.எல்.ராகுல் 21 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அவுட்டாகினர். சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 (3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் 47.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார்.

இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com