இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றி: இலங்கை கேப்டன் நெகிழ்ச்சி

சரவெடியான பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.
இங்கிலாந்துக்கு எதிரான  வரலாற்று வெற்றி: இலங்கை கேப்டன் நெகிழ்ச்சி
Published on: 

ராவல்பிண்டி,

பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை , இங்கிலாந்து அணிகள் மோதின.

பேட்டிங்குக்கு சொர்க்கப்புரியான இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 429 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் மண்ணில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 202 ரன்கள் (116 பந்து, 21 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார். இரட்டை சதத்துக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப் பட்ட போது, ஹாரி புரூக் சிக்சர், பவுண்டரியுடன் 4-வது பந்தில் அந்த ஸ்கோரை அடைந்தார்.

ஆனால் ஹாரி புரூக் இரட்டை சதம் அடித்தும் பலன் இல்லை. 430 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 24 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்தாலும் அவிஷ்கா பெர்னாண்டோ (97 ரன்), பவன் ரத்னாயகே (130 ரன், 15 பவுண்டரி, 3 சிக்சர்), தசுன் ஷனகா (97 ரன், 6 பவுண்டரி, 8 சிக் சர்), ஜனித் லியானகே (61 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரது சரவெடியான பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 430 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியது.

வெற்றி தொடர்பாக பேசிய இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் கூறியதாவது,

நாங்கள் ஐந்து போட்டிகளில் டாஸ் வென்றோம். பனிப்பொழிவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பந்துவீசிய பிறகு இலக்கைத் துரத்தி விளையாடினோம். பந்துவீச்சைப் பொறுத்தவரை, சில போட்டிகளில் நாங்கள் மிகச் சிறப்பாகச் சரியான பகுதிகளில் பந்துவீசினோம். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டோம். இன்று இலக்கையும் மிகச் சிறப்பாகத் துரத்தி வெற்றி பெற்றோம். கேப்டனாக இன்றைய ஆட்டத்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசித்தேன்.

நானும் பயிற்சியாளரும் இதைப் பற்றி சிறிது ஆலோசித்தோம். பேட்ஸ்மேன்களாக நாங்கள் முதலில் ஓரிரு ஓவர்கள் இயல்பாக விளையாட வேண்டும். அதன் பிறகு, ஆட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்ய வேண்டும் என நினைத்தோம். பின்னர் தசுனை முன்கூட்டியே களமிறக்க முடிவு செய்தோம்.

எங்கள் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தி, பொறுப்புடன் விளையாடினார்கள். அதனால்தான் 430 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி வெற்றி பெற முடிந்தது என்று நினைக்கிறேன்.

அவிஷ்கா, பவன், தசுன், ஜனித் என அனைவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய மன உறுதியை வெளிப்படுத்தினார்கள். கேப்டனாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com