

கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட்டை தற்போது இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) ஜூரம் ஆட்டுவிக்கிறது. முதல்முறையாக பிங்க் நிற பந்தில் விளையாடப்போவதை நினைத்து நமது வீரர்கள் பரவசமடைந்து இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பதவி ஏற்றதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு அச்சாரம் போட்டார். கேப்டன் விராட் கோலியிடம் 3 வினாடிகளில் சம்மதம் வாங்கிக் கொண்ட அவர் அதன் பிறகு வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தையும் ஒப்புக் கொள்ளச் செய்தார். கங்குலியின் பதவி காலத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடப்போகும் ஒரே டெஸ்ட் தொடர் இது தான். அதனால் தான் இந்த தொடரிலேயே பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்து வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டார்.
இந்தியா-வங்காளதேசம் மோதும் இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. ஏறக்குறைய 5 ஆயிரம் வங்காளதேச ரசிகர்களும் இந்த போட்டியை பார்க்க வருகை தர உள்ளனர்.
*சூரியன் மறையும் சமயத்தில் பிங்க் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். பந்து சரியாக தெரியவில்லை என்று பேட்ஸ்மேன்கள் நடுவரிடம் புகார் செய்தால், முன்கூட்டியே மின்னொளி எரியவிடப்படும்.
எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் ஷமி - -விருத்திமான் சஹா
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது இருக்கும் பார்மில் பிங்க் பந்து என்ன எந்த பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர். அவரது வேகமும், பந்தை ரிவர்ஸ்விங் செய்யும் திறமையுமே அதற்கு சான்று. களத்தில் பிங்க் பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் எங்களது பவுலர்களின் உத்வேகம், ஆட்டத்திறனுக்கு முன் பந்தின் நிறம் ஒரு பிரச்சினையே இல்லை. வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக அமையும். எது எப்படி என்றாலும் இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். பிங்க் பந்தின் மினுமினுப்பை பார்க்கும்போது, ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு சஹா கூறினார்.
20 ஓவர் போட்டி போன்று உணர்வார்கள் - வெட்டோரி
வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிங்க் பந்து, பகல்நேரத்தில் வழக்கமான போட்டிக்குரிய தன்மையுடன் தான் இருக்கும். மின்னொளியின் கீழ் தான் சவாலாக இருக்கும். இங்கு (கொல்கத்தா) சூரியன் தற்போது சீக்கிரமாகவே அஸ்தமனம் ஆகி விடுகிறது. இந்த நேரத்தில் பிங்க் பந்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிங்க் பந்து போட்டியை டி.வி.யில் பார்த்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். அந்தி பொழுதில் இரு அணிகளும் தங்களது யுக்திகளில் சில மாற்றங்களை செய்ய முயற்சிப்பார்கள். அதன் பிறகு போட்டியை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.
முந்தைய பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை புரட்டிப்பார்த்தால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தெரியும். ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்களால் பகல் நேரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்க முடியும். பிங்க் பந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
அதிகமான ரசிகர்களை கொண்டு வரக்கூடிய போட்டியாக இருப்பதால் இதை நாம் பாராட்டியாக வேண்டும். மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் போது, கிட்டத்தட்ட 20 ஓவர் அல்லது ஒரு நாள் போட்டிக்குரிய சூழலே நிலவும்.
விராட் கோலியோ அல்லது ரோகித் சர்மாவோ பேட்டிங் செய்ய இறங்கும் போது இதை 20 ஓவர் போட்டி போன்று உணருவார்கள். இவ்வாறு வெட்டோரி கூறினார்.