அறிமுக டெஸ்ட்; பும்ரா கொடுத்த ஆலோசனையை அப்படியே செய்தேன் - ஆகாஷ் தீப்

இன்றைய ஆட்டத்தில் இந்தியா தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்த பின் இந்திய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய பயிற்சியாளர்களிடம் நான் பேசினேன். எனவே அறிமுகப் போட்டியை முன்னிட்டு நான் பதற்றமடையவில்லை. ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் லென்த்தை இழுத்து வீச வேண்டும் என பும்ரா ஆலோசனை கொடுத்தார். அதைத்தான் இப்போட்டியில் நான் அப்படியே செய்தேன்.

நோ பால் வீசியதற்காக நான் மோசமாக உணர்ந்தேன். குறிப்பாக ஜாக் கிராவ்லி சிறப்பாக பேட்டிங் செய்ததால் அது அணியை பாதித்து விடக்கூடாது என்று நினைத்தேன். ஆரம்பத்தில் பிட்ச்சில் கொஞ்சம் உதவி கிடைத்தது. அதே சமயம் பந்து மிருதுவாகவும், பிட்ச் மெதுவாகவும் இருந்தது. நாங்கள் முடிந்தளவுக்கு நெருக்கமாகவும் சரியான இடங்களிலும் பந்து வீச முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com