

மும்பை,
சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதில் தான் எனக்கு எப்போதும் விருப்பம் என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியாவுக்காக வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஒரு போதும் கனவு கண்டதில்லை. ஆனால் அது கடவுளின் திட்டம். இந்தியாவுக்காக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகி விட்டாலும், சிவப்பு பந்து கிரிக்கெட் தான் எனது பிரதான பலமாகும்.
சிவப்பு பந்தில் பயிற்சி எடுப்பதை கைவிட்டதில்லை. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன். அதை யாரும் பார்த்ததில்லை. எனது 10 வயதில் இருந்தே இது தொடருகிறது. இப் போது எனக்கு வயது 23. ஐ.பி.எல். கிரிக்கெட் காரணமாக நான் வெள்ளைநிற பந்து வடிவ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் அதற்கு முன்பே சிவப்பு பந்து போட்டியில் வலுவான அடித்தளம் அமைத்துள்ளேன். எனவே அது தான் எனது பலமாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். அது எனது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.
தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகள் இருப்பதால் உள்ளூர் முதல்தர சிவப்பு பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கடந்த 3-4 ஆண்டுகளாக ரஞ்சி கிரிக் கெட்டில் விளையாட முயற்சிக்கிறேன். முடிந்த அளவுக்கு உள்ளூர் சிவப்பு பந்து போட்டி களில் ஆடுவதற்கு முயற்சிக்கிறேன். ஏனெனில் அதில் நிறைய ரன்கள் குவித்து, அதன் மூலம் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை' என்றார்.