

லண்டன்,
இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சமாரி அதபத்து, ஒரு கேப்டனாக தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டிக்கு பிறகு பேசிய இலங்கை கேப்டன் சமாரி அதபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும் சோகத்தில் இருப்பதாக தெரிவித்தார்
"ஒரு கேப்டனாக தோல்வியடைந்துவிட்டேன்"
போட்டிக்கு பிறகு பேசிய சமாரி அதபத்து, "இந்த தோல்வி வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணிக்காக கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். ஆனால், ஒருமுறைகூட உலகக் கோப்பை அரையிறுதிக்கு அணியை அழைத்து செல்ல முடியவில்லை. தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், ஒரு கேப்டனாக நான் தோல்வியடைந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். நான் பொறுப்பாக விளையாடியிருந்தால், நாங்கள் இந்த போட்டியில் வென்றிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன்" என்று தெரிவித்தார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் மூன்று ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமாரி அதபத்து உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இலங்கை அணி 98 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
99 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி, அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
நடப்பு சாம்பியனான நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தாலும், இலங்கை அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று குரூப் 'பி' பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது. இதனால் இலங்கை அடுத்ததாக ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.