ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தேர்வு

ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
image courtesy; twitter/@ICC
image courtesy; twitter/@ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை சமீபத்தில் ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் ஜேக் க்ராவ்லி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் பாஸ் டீ லீட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை சமன் செய்ய முக்கிய பங்கு வகித்தார். மேலும் அவர் ஆஷஸ் தொடரில் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம் அவர் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர், எல்லீஸ் பெர்ரி, இங்கிலாந்தின் நேட் ஸ்கீவர் பிரண்ட் ஆகியோர் பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் தொடர்ந்து 2-வது முறையாக சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை பெற்றிருந்தார். இதன் மூலம் வீரர் மற்றும் வீராங்கனைகளில், ஐசிசி-யின் மாதத்திற்கான விருதை தொடர்ந்து 2 முறை பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார். பெண்கள் ஆஷஸ் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சிறந்த வீராங்கனையாக கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com