

லண்டன்,
மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கடந்த 2009ம் ஆண்டு ஐசிசி அறிமுகம் செய்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 9 முறை நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2024ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது.
12 அணிகள் 2 பிரிவுகளாக (தலா 6 அணிகளாக) பிரிக்கப்பட்டு விளையாட உள்ளன. இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும். அரையிறுதியில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை மோத உள்ளன. பெர்மிங்கமில் உள்ள எச்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 84 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 22½ கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 11 ¼ கோடியும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியை தழுவும் அணிகளுக்கு தலா ரூ. 6½ கோடியும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.