பாகிஸ்தான் தூதரகத்தில் இழிவுபடுத்தப்பட்டதாக கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகீர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தூதரகத்தில் இழிவுபடுத்தப்பட்டதாக கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் தூதரகத்தில் இழிவுபடுத்தப்பட்டதாக கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகீர் குற்றச்சாட்டு
Published on

ஜோகன்னஸ்பர்க்,

பாகிஸ்தானில் வரும் 12,13,15 ஆகிய தேதிகளில் உலக லெவன் அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் உலக லெவன் அணியில் டெஸ்ட் விளையாடும் 7 நாடுகளைச்சேர்ந்த மிகச்சிறந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உலக லெவன் அணிக்காக விளையாடும் வீரர்களில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகீரும் அடங்குவார். இதன் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்காக விசா பெற பர்கிங்காமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இம்ரான் தாகீர் அணுகியுள்ளார்.

ஆனால், இம்ரான் தாகீரை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இழிவுபடுத்தி வெளியேற்றியது தெரியவந்துள்ளது. இந்த தகவலை இம்ரான் தாகீர் தனது டுவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இம்ரான் தாகீர் கூறியிருப்பதாவது:- பர்கிங்காமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் எனக்கு நேர்ந்தது. பாகிஸ்தான் விசாவை உறுதி செய்வதற்காக நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் நான் பாகிஸ்தான் தூதரகம் சென்றேன்.

ஆனால், ஐந்து மணி நேரம் என்னை காக்கவைத்த அதிகாரிகள், பின்னர் வந்து அலுவலக நேரம் முடிந்துவிட்டதாக கூறி என்னை வெளியேறுமாறு கூறினர். இதையடுத்து, துணைதூதர் தலையிட்டு, விசா வழங்குமாறு பணியாளர்களை வலியுறுத்திய பிறகே எனக்கு விசா வழங்கப்பட்டது. பாகிஸ்தான் வம்சாவளி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு உலக லெவன் அணிக்காக விளையாடும் நோக்கம் உடையவர் இவ்வளவு மோசமாக நடத்தப்படுவது மிகப்பெரும் முரணாக உள்ளது. எனக்கு விசா கிடைக்க உதவிய தூதருக்கு தலைவணங்குகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச்சேர்ந்த இம்ரான் தாகீர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாகீர், 57 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com