பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடியது.
பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா
Published on

பெர்த்,

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா லபுஸ்சேனின் சதத்தின் உதவியுடன் 416 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 166 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

பாலோ-ஆன் வழங்காத ஆஸ்திரேலியா 250 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடி 9 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டிம் சவுதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்த்தது போலவே போராட்டம் இன்றி சரண் அடைந்தனர். அதிலும் மின்னொளியின் கீழ் பிங்க் பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடைசி 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 65.3 ஓவர்களில் 171 ரன்னில் அடங்கியது. இதனால் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் வாட்லிங் 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 14 ரன்னிலும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் 22 ரன்னிலும் வீழ்ந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஏற்கனவே முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் இருப்பதால் வெற்றி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு 40 புள்ளிகள் கிடைத்தது.

3 போட்டி கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com