நேபாளத்தை 26 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஏ அணி... 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா ஏ
Published on: 

தோஹா,

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

திலக் வர்மா, குஷாக்ரா அபார சதம்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா சிறப்பாக விளையாடி 113 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 102 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யான்ஷ் ஷெட்ஜ், வெறும் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா ஏ அணி 332 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

சுருண்ட நேபாளம்

இதையடுத்து 333 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாள அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நேபாள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக பவன் சர்ராப் மற்றும் ரஷித் கான் தலா 6 ரன்கள் எடுத்தனர். பிரதீஸ் ஜிசி 4 ரன்களும், நந்தன் யாதவ் 2 ரன்களும் எடுத்தனர். இதனால் நேபாள அணி 11.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இந்தியா ஏ அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

மிரட்டிய பிரின்ஸ் யாதவ்

இந்திய அணியின் பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் அபாரமாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 ஓவர்கள் வீசிய அவர், 2 மெய்டன் ஓவர்களுடன் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஹர்ஷித் ராணா 6 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாபாஸ் அகமது ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

X